பதிவு செய்த நாள்
14
ஜூன்
2014
11:06
திருவாரூர்:ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில், குரு பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.ஆண்டுதோறும், குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்கு பிரவேசிப்பது, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நேற்று மாலை, 5:57 மணிக்கு, குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, யாகம், விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு, குரு பகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவில், தமிழக அமைச்சர்கள், காமராஜ், செந்தில் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.குரு பெயர்ச்சியையொட்டி, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசியினர், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இந்த ராசியினர் பங்கேற்கும் வகையில் கோவிலில் லட்சார்ச்சனை விழா, இரு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முதற்கட்டமாக, குரு பெயர்ச்சிக்கு முன், மே 28 முதல், ஜூன் 5 வரை நடந்தது. குரு பெயர்ச்சிக்குப் பின், வரும் 16ல் துவங்கி, 22ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.