பதிவு செய்த நாள்
14
ஜூன்
2014
11:06
விருத்தாசலம்:விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில், பழங்கால, 238 செப்பு நாணயங்கள் இருந்தன.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பக்தர்களின் காணிக்கை உண்டியலை பிரித்து எண்ணுவது வழக்கம்.அதன்படி, நேற்று காலை காணிக்கைகள் எண்ணப்பட்டன. அப்போது, உண்டியலில், 238 பழங்கால செப்பு நாணயங்கள் இருந்தன. இதில், ஒரு புறம் வில் அம்பும், மற்றொரு புறம் வாயிலில் ஒருவர் நிற்பது போன்றும் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பழங்காலத்து நாணயம் என்பதால், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த, பாதுகாப்பாக வைத்தனர்.செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன் கூறுகையில், உண்டியலில், 238 பழங்கால செப்பு நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த நாணயங்கள், எந்த காலத்தைச் சேர்ந்தவை என்ற விவரம் தெரியவில்லை. நாணயங்களின் காலம் குறித்து, அதிகாரிகளின் ஆய்வுக்கு பின் தெரியவரும், என்றார்.