பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
ப.வேலூர்: பொத்தனூர், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை (ஜூன், 17) திருத்தேர் பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த பொத்தனூரில், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது. 10ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, தினமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி சிம்மம், பூதம், அன்னம், யானை, பூந்தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, மாலை, 6 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. இன்று (ஜூன், 16) மாலை, 5 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்றனர். நாளை காலை, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18ம் தேதி காலை, 8 மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாலை, பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. ஜூன், 19ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல், கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி, காலை, 9 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு முத்து பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது.