பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
03:06
ஆணோ, பெண்ணோ... அவரவர் மனதுக்குள் லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ள வேண்டும். ஏன்? மனைவிமார் கணவரிடம் எதையாவது கேட்டு நச்சரித்துக் கொண்டே இருக்கக்கூடாது. ஆனால், சீதாதேவி, தன் கணவரிடம் எப்படியாவது தனக்கு அந்த மான் வேண்டுமெனக் கேட்டாள். மனைவி சொல் மந்திரமாயிற்றே! ராமன் கிளம்பினார். அருகில் இருந்த லட்சுமணன் அண்ணனைத் தடுத்தான். “அண்ணா! தங்கள் சொல்லுக்கு மறுசொல் பேசுபவனல்ல இந்தத்தம்பி. ஆனால், இது மட்டும் வேண்டாம். இந்த உலகத்தில் தங்கமான் என்று ஒன்று இருந்ததாக சரித்திரம் இல்லை. இயற்கைக்கு முரணான ஒன்று இருப்பதாக நினைப்பது தவறு. இதில், ஏதோ சூது இருக்கிறது. போகாதீர்கள்,” என்றான்.
தன் மைத்துனனின் கருத்தையும் சீதாதேவி ஏற்கவில்லை. வயதிலோ, பதவியிலோ சிறியவராயினும், சொல்லும் கருத்து சரியாக இருந்தால், அதை பெரியவர்கள் ஏற்க வேண்டும். இந்த இடத்திலும், லட்சுமணனின் கருத்து மீறப்பட்டது. விளைவு, அந்த மாயமான் ராமனை எங்கோ இழுத்துச் சென்று விட்டது. நீண்டநேரமாக ராமனைக் காணவில்லை. சீதாதேவிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதை அதிகப்படுத்தும் வகையில் ‘ஹே சீதா! ஹே லட்சுமணா!’ என்ற அபயக்குரல் கேட்டது. ராமபாணத்தில் சிக்கிய மாரீசன் தான் அப்படி வஞ்சகமாக ஓலமிட்டான். ஆனால், ராமனுக்கு தான் ஏதோ ஆபத்து என தவறாகப் புரிந்து கொண்ட சீதா, தன் மைத்துனனை கடுஞ்சொல் கூறி, அண்ணனை அழைத்து வருமாறு கூறினாள். அப்போதும் லட்சுமணன் அவளுக்கு நன்மையே செய்தான். “என் அன்னைக்கு நிகரான அண்ணியே! தயவுசெய்து, இந்தக் கோட்டை தாண்டி வெளியே வராதீர்கள். பணிவுடன் இதைத் தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அந்த நேரத்தில் பிச்சைக்காரன் வடிவத்தில் ராவணன் வந்தான். லட்சுமண ரேகையைத் தாண்ட முயன்றான். அது அனலாய் சுட்டெரித்தது. உள்ளே நுழைய முடியவில்லை. “அம்மா பிச்சை போடு” என்று சத்தமாகக் கத்தினான். சீதாதேவி கோட்டுக்குள் நின்று பிச்சையிட்டாள். “பிச்சையிடுபவர் கோட்டுக்குள்ளும், பெறுபவர் கோட்டுக்கு வெளியே நிற்பதும் முறையல்ல. நீ கோட்டுக்கு வெளியே வந்து போடு,” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். அவளும் கோட்டைத் தாண்டினாள். அந்த நேரமே பிடித்தது அவளுக்கு கெட்ட நேரம். ராவணன் அவளை அள்ளிச்சென்று விட்டான். மனிதர்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இன்றைய நவீன அறிவியல் வரவுகளின் நன்மையை மட்டும் அனுபவிக்கலாமே தவிர, அவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிலும், பெண்கள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாயவலையில் சிக்கி உயிரினும் மேலான மானத்தை இழக்கிறார்கள். உங்களுக்கு நீங்களே லட்சுமண ரேகை போட்டு கொள்ளுங்கள். நல்லதையே நாடுங்கள்.