பதிவு செய்த நாள்
28
ஜூன்
2014
01:06
ஈரோடு: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், யாக சாலை பூஜைகள், வரும், இரண்டாம் தேதி துவங்குகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் வடிவுடைய நாயகியம்மன் உடனமர் மகுடேஸ்வரர், மகாலட்சுமி தயார் உடனமர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, அனுமன், கருடன், அகஸ்தியர், பரத்துவாசர் வழிபட்ட தலம். திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம். கடந்த, 1999 ஆகஸ்ட், 25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிஷேக பூஜைகள் வரும், இரண்டாம் தேதி, கிராம தெய்வ வழிபாட்டுடன் துவங்குகிறது. வரும், மூன்றாம் தேதி, பிள்ளையார் வேள்வி, எண் திசை வழிபாடு, நிலத்தேவர் வழிபாடுகளும், நான்காம் தேதி, 16 பிள்ளையார் வேள்வி, திருமகள் வேள்வி, யானை வழிபாடு, பசு வழிபாடும், எண் வகை மருந்து சாற்றுதல், முதல் கால யாக வேள்விகள் நடக்கிறது.வரும், ஐந்தாம் தேதி, இரண்டாம் கால யாக வேள்வி, பேரொளி வழிபாடு, எண் வகை மருந்துடன், மூலவருக்கு தங்க பட்டியும், அம்மனுக்கு வெள்ளி பட்டியும் சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், ஆறாம் தேதி, நான்காம் கால யாக வேள்வி துவங்கி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, ஏழாம் தேதி, ஆறாம் கால யாக வேள்வி, உயிர் நாடி அளித்தல், குடங்கள் புறப்பாடும் நடக்கிறது. காலை, காலை, 9.15 மணிக்கு, ராஜகோபுரங்கள், விமான கலசங்களில் நன்னீராட்டு விழாவும், அதன் பின் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகியம்மன், பிரம்மா, வீரநாராயண பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து ஸ்வாமிகளுக்கும், கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், பிரசாதம் வழங்கப்படுகிறது.வரும், ஏழாம் தேதி மாலை பெரு நன்னீராட்டு, சுவாமி-அம்பாள், பெருமாள்-தாயார் திருக்கல்யாணமும், மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. யாகசாலை வழிபாட்டு நேரங்களில் திருமறை, திருமுறை ஆகமங்கள், திவ்ய பிரபந்தங்கள் முற்றோதல் நடக்கும். கும்பாபிஷேக தினத்தன்று காலை, ஏழு மணி முதல் அன்னதானம் நடக்கும். வரும், எட்டாம் தேதி மாலை, மூன்று மணி முதல், 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருவதாக, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.