பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
12:07
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்குகள் சரணாயலயத்தில் உள்ள சேர்வராயருக்கு, மீனவ கிராமத்தினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தின் மத்தியில், மீனவர்களின் காவல் தெய்வமான சேர்வராயர் மற்றும் சோனியப்பர் கோவில் உள்ளது. காட்டில் திறந்த வெளியில் உள்ள இந்த கோவிலில் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கிராம மக்கள் ஆண்டு தோறும் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.ஆண்டு தோறும், மீன்பிடி தடைகாலம் முடிந்து தொழிலுக்கு செல்லும் மீனவர்கள், கடலில் மீன்வளம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்கள் நலமாக இருப்பதற்கும், காட்டுக்குள் இருக்கும் இந்த சேர்வராயருக்கு சிறப்பு பூஜை செய்து, விழா நடத்தப்படுகிறது. சேர்வராயருக்கு பால், சந்தனம், பழங்கள் போன்றவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சோனியப்பருக்கு கிடாவெட்டி படையலும் செய்து, ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வழிபட்டனர். இந்த வழிபாட்டில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.