பதிவு செய்த நாள்
07
ஜூலை
2014
02:07
இறைவனின் கிருபையையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள் மற்றும் பொய் சொல்பவர்களின் நாக்கு புண் பொருந்திய நாக்கு, எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டு புண்ணாக்கு சித்தராக மாறியிருக்கலாம் என்றும் சொல்வர். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வால யத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் ஜீவச மாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோயிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முக மாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இக்குகை, பழநி வரை நீண்டு செல்வதாகவும் நம்பப்படுகிறது.