உங்கள் முன் இருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சுகபோகத்தை மறந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பாக மாறி செயல்படத் தொடங்குங்கள். அடுத்தவர்களின் குறைகளை மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு இருந்தாலன்றி, யாரையும் குறை சொல்ல முற்படாதீர்கள். வாழ்வில் எதிர்ப்படும் அனைத்தும் நம் முன்னேற்றத்திற்காக என்றே எண்ணிச் செயல்படுங்கள். அப்போது தான் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். எந்த செயலையும் உங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக செய்வது கூடாது. அதில் பொதுநலம் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் உண்ணும் உணவு மகத்தான செயல்களைச் செய்வதற்குத் தேவையான சக்தியை உங்களுக்கு அளிப்பதாக இருக்கட்டும். பேச்சை எப்போதும் உங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அவசியமானதை மட்டுமே பேசுங்கள். தளராத முயற்சி உங்களுக்குள் புதிய கதவைத் திறக்கட்டும். அப்போது ஒரு திவ்விய ஒளி உங்கள் மீது குவியும்.உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர் என்பதை உணருங்கள். நல்லவர்களின் லட்சியம் வெற்றி பெறுவது உறுதி. பெருமித உணர்வோடு வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோடுங்கள். கடவுளை உணரும் உணர்வு அழகின் மலர்ச்சியால் வெளிப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது முழுமையற்றது தான். எப்போதும் அன்பு கொண்டவராக இருங்கள். எதிர் மறையான விமர்சனங்களை விட்டு விடுங்கள். அன்பில்லாத மனிதன் சிடுமூஞ்சியாகவும், இரக்கம் இல்லாதவனாகவும் ஆகி விடுவான். அவனுக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்புணர்வு உண்டாகி விடும். அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தானதும் கூட. அதுவே, உங்களிடம் இருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு. உங்களிடமுள்ள முழு வலிமையையும் பயன்படுத்தி நேர்மையுடன் செயல்பட்டால், அச்சத்தின் நிழல் கூட இல்லாமல் செய்ய முடியும். புதிய உலகம் படைப்பதற்காகவே மனிதராகப் பிறந்திருக்கிறோம். நாம் இங்கு இருப்பதே மதிப்பிட முடியாத பெரிய வாய்ப்பு. துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கை மனதில் மேலோங்கட்டும். வாழ்க்கைப்பாதையின் முடிவில் பேரொளியைக் காணத் தயாராக இருங்கள். முன்னேறுவதற்காகவே பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் முன்னேறாவிட்டால் நம் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும். வழியில் துன்பங்களும், தடங்கல்களும் குறுக்கிடலாம். அதற்காக நேர்மையை கைவிடுவது கூடாது. முயற்சியும், போராட்டமும் இல்லாமல் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது. மாசற்ற மனம், நோயற்ற உடல் இரண்டும் இருந்து விட்டால் போதும். எதையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும், சாதிக்கும் உந்துதலையும் பெற்று விட முடியும். கடந்த காலம் எப்படிப்பட்டதாயும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் தவறு கூட செய்திருக்கலாம். ஆனால், உள்ளத்தின் அடி ஆழத்தில் துõய்மை மிக்கவராகவே எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த நிலையிலும் உதவிக்காக கடவுளை வேண்டிஅழைக்க கற்றுக் கொள்ளுங்கள். அற்புதங்களை நிகழ்த்த கடவுளால் மட்டுமே முடியும்.