பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
ஈரோடு: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அளிஞ்சி குச்சிகள் விற்பனை துவங்கி உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதத்துக்கு பின்னரே, ஒன்றன் பின் ஒன்றாக, பண்டிகை நாட்கள் அணிவகுப்பதாக, இந்துக்கள் கருதுகின்றனர். எனவே, ஆடி மாத பிறப்பை வரவேற்று கொண்டாடுவது வழக்கம். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, வீடு, கடை, வர்த்தக நிறுவனங்களை சுத்தம் செய்வது, மாவிலை தோரணங்கள் கட்டுவது போன்றவற்றில் ஈடுபடுவர். ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு, ஆடி மாத பிறப்பன்று குடும்பத்துடன் சென்று நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆடி மாத பிறப்பன்று, விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை "தேங்காய் சுடும் நோன்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, அளிஞ்சி மரக்குச்சிகள், நேற்று, ஈரோடு தினசரி மார்க்கெட் பகுதியில் விற்பனைக்கு வந்து இருந்தது. இதுகுறித்து குச்சிகள் விற்பனை செய்த கார்த்திகேயன் கூறியதாவது:
சேலம் மாவட்டம் வீரபாண்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் தான், அளிஞ்சி மரங்கள் அதிகளவில் உள்ளன. அங்கிருந்து தான், தேங்காய் சுடும் நோன்புக்காக, அளிஞ்சி மரக்குச்சிகளை கொண்டு வருகிறோம். ஈரோட்டில், பத்துக்கும் மேற்பட்டோர், ஆடி மாதத்துக்கு முதல் நாள் ஆண்டுதோறும் விற்பனை செய்கிறோம். பாரம்பரியத்தை கடைபிடிக்கும் சில குடும்பங்கள், அளிஞ்சி குச்சிகளை வாங்கி செல்கின்றனர். ஆனால், நாகரீகம் காரணமாக அளிஞ்சி மரக்குச்சி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குச்சி ஜோடி, 20, 30 ரூபாய் என, இரு ரகங்களாக விற்று வருகிறோம். பிற குச்சிகளையும், சில வியாபாரிகள் அளிஞ்சி குச்சிகள் என்று விற்பனை செய்கின்றனர். காலையில், விற்பனை குறைவாகவே உள்ளது. மாலையில் விற்பனை சூடுபிடிக்கும், என்றார். இதேபோல், பல்வேறு சைஸ்களில், தேங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சைசுக்கு ஏற்ற விலையில் வியாபாரிகள் விற்பனை செய்தனர்.