பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கொடி மரத்தில் சேவலும், மயிலும் ஒரு சேர காட்சி கொடுத்தது, பக்தர்களை பரவசப்படுத்தியது. சென்னிமலை முருகன் கோவிலில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் அமாவாசை, சஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை ஆகிய முக்கிய விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகனை வழிபட்டு வருகின்றனர். கடந்த, ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள், வழிபட்டு வருகின்றனர். நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகனை வணங்க வந்த சமயம், கொடி மரத்தில், சேவலும், மயிலும் நீண்ட நேரம் ஒரு சேர நின்றதால், மக்கள் அதிசயத்துடன் பார்த்து வியந்து, வழிபட்டனர். பக்தர்கள் இது பற்றி கூறியதாவது: கும்பாபிஷேக தினத்தன்று பருந்தும், மயிலும் கோபுரத்தை சுற்றி வந்தது. அதுபோல, கிருத்திகை தினத்தில், நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை கண்டும், பறவைகள் கலையாமல், கொடிமரத்தில் அமர்ந்து இருந்ததை பார்க்க, முருகனே ஆசி கூறியதாக இருந்தது. முருகனுடைய வாகனமான மயிலும், கொடியில் உள்ள சேவலும், உயிருடன் நேரில் காட்சி கொடுத்தது மெய் சிலிர்க்க செய்தது, என்றனர்.