பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அருகே, பக்தர் ஒருவர் தனது நெஞ்சில், மஞ்சள் இடித்து வழிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி, பர்கூர், பேறுஅள்ளி, சந்தூர், போச்சம்பள்ளி, மருதேரி, சுண்டகாப்பட்டி, பண்ணந்தூர், தேவிரஅள்ளி, எட்டரப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, கமலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள முருகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.கோவில்களில் காலை முதல் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். பிரசித்த பெற்ற பர்கூரை அடுத்த ஜெகதேவி பாலமுருகன் கோவிலின், 69வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலை படிபூஜை, வாஸ்து பூஜை கொடியேற்றுதல் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை யாகசாலை பூஜை, பால முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. காலை, 11 மணிக்கு இடும்பன் பூஜை முடிந்து வேல் போட்டுக் கொள்ளுதல், சடல் தேர், கல் உரல், இரும்பு சங்கிலி ஆகியவற்றை நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் முதுகில் குத்திக்கொண்டு பிரார்த்தனை செலுத்தினர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், 500 அடி நீளமுள்ள அலகு குத்திக்கொண்டும், எலுமிச்சம் பழங்களை உடலில் கோர்த்துக் கொண்டும், 300 அடி நீளமுள்ள வேல் குத்திக் கொண்டும், கார் இழுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஜெகதேவியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் முருகன், 49, என்பவர் தனது மார்பு மீது குந்தாணி வைத்து, 5 கிலோ எடையுள்ள மஞ்சளை உலக்கையால் இடித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து முருகன், 40, அடி உயரமுள்ள ஊஞ்சலில், அலகு குத்தியபடி குழந்தையுடன் பறந்து வந்து சாமிக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்தார். ஜெகதேவி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவசமடைந்தனர்.