பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
நாமக்கல்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.நாமக்கல்-மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகை மகாயாகம் மற்றும் 108 சங்கு அபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சுப்ரமணியர், ஷடாஷர ஹோமம் நடந்தது.காலை, 10 மணிக்கு பூர்ணாகுதி, சோடசோபசார பூஜை, 11 மணிக்கு, 108 மகா சங்கு அபிஷேகம், 12 மணிக்கு, மகா தீபாராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு சிறப்பு முத்தங்கி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காலை முதல் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம், 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 5 மணிக்கு ராஜ அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.அதேபோல், காளிப்பட்டி கந்தசாமி கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில், கூலிப்பட்டி முருகன் கோவில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுக சுப்ரமணியர் கோவில், திருச்செங்கோடு செங்குட்டுவர் கோவில் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.