திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சன் என்ற அசுரனிடம்இருந்து பூமாதேவியைக்காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றியதற்காக மகிழ்ச்சி அடையாமல், அவள் அழத் தொடங்கினாள்.அதற்கான காரணத்தை திருமால் கேட்டபோது, உங்கள் மனைவியான நான் அசுரனிடம் சிக்கியதும் ஓடோடி வந்தீர்களே! ஆனால், என்னில் வாழும் எத்தனையோ கோடிக்கணக்கான உயிர்கள்செய்வதறியாமல் பிறவி என்னும் இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார்களே! அவர்களைக் காப்பாற்ற வழி சொல்லுங்கள் என்று வேண்டினாள். அதை உன் மூலமே செய்கிறேன். நீ மானிடராக பிறந்தாலும், என்னையே நினைத்து என்னை அடைவாய். உன்னைப் பார்க்கும் உயிர்களில், யாரொருவர் உன்னைப் போல் பக்தியைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் என்னை அடைவர், என்றார் பெருமாள். அதன்படி கோதை என்னும் பெயருடன் ஆண்டாள் பூமியில் அவதரித்தாள். திருமாலையே பக்தி செய்து அவரையே அடைந்தாள்.