வெள்ளிப் பல்லக்கில் 20–ந்தேதி புதுப்பள்ளியறைக்கு சுவாமி செல்கிறார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 12:08
ராமேசுவரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும் போது பள்ளியறையில் இருந்தும் அதுபோல் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்பும் யானை தந்தத்தால் ஆன பல்லக்கில் சுவாமி வலம் வந்து பள்ளியறைக்குச் செல்வதும் வழக்கம். ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் ஒருநாள் மட்டும் சுவாமி வெள்ளி பல்லக்கில் வலம் வந்து புதுப்பள்ளியறைக்கு செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.வெள்ளிப் பல்லக்கில் சுவாமி புதுப்பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி ஆடித் திருக்கல்யாண விழாவில் சுவாமி– அம்பாளுக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்பு நடைபெறும் ஒன்றாகும். இந்த ஆண்டு கோவில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 1–ந் தேதி அன்று ராமநாதசுவாமி– பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.புதுப்பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சிஇதைத்தொடர்ந்து புதுப்பள்ளியறை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. ராமேசுவரம் கோவிலில் வருகிற 20–ந் தேதி (புதன்கிழமை) அன்று புதுப்பள்ளியறை பூஜைகள் நடைபெற உள்ளன.அன்று இரவு 8 மணிக்கு கோவிலின் நடை சாத்தப்பட்ட பின்பு தங்கத்தால் ஆன சுவாமி வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்டு சுவாமி வெள்ளி பல்லக்குடன் பிரகாரத்தை சுற்றி வரும். அதன் பின்பு அம்பாள் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்படும் புதுப்பள்ளியறைக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டு தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்டு மகாதீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.சுவாமி புதுப்பள்ளியறைக்கு செல்வதற்காக கோவிலில் உள்ள பழமை வாய்ந்த வெள்ளி பல்லக்கு பாலீஷ் செய்யப்பட்டு பள பளப்பாகவும் புதுப்பொலிவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருடத்தில் ஒருநாள் மட்டுமே ராமேசுவரம் கோவிலில் சுவாமி வெள்ளிப் பல்லக்கில் புதுப்பள்ளியறைக்கு செல்வது சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.