திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அரியவகையை சேர்ந்த, 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வெற்றி அறக்கட்டளை, துளிகள் காங்கயம் சார்பில், ‘வனத்துக்குள் திருப்பூர் –11’வது திட்டத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று, சிவன்மலை அருகே நடந்தது. சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான, சென்னிமலை ரோட்டிலுள்ள 10.5 ஏக்கர் நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும், 40 அரிய வகை மரக்கன்றுகளில், 1,000 மரக்கன்றுகள் தேர்வு செய்து, நடப்பட்டுள்ளன.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், போலீஸ் எஸ்.பி., கிரீஷ் அசோக் யாதவ், கூடுதல் எஸ்.பி., அர்ஹிதா ராஜ்புட், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் போஜ், சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில், வெற்றி மற்றும் துளிகள் காங்கயம் அமைப்பின் தன்னார்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.
கோவில் நிலத்தில், மரங்கள் பாதுகாப்பாக வளர ஏதுவாக, துளிகள் அமைப்பு சார்பில், சுற்றி லும் வேலி அமைத்து, ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டிருந்தது.
‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.