திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இந்தாண்டு சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம், இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் கிழக்கு முகப்பில், விமரிசையாக நடைபெறுகிறது. திருப்போரூர் கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை வீரபாகு வேடமணிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்வர். கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச் சென்று வதம் செய்வார். இதற்கான, ஏற்பாடுகள், கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. நேற்று, ஐந்தாம் நாள் உத்சவம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு உத்சவத்தில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்த சுவாமிக்கு, லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவும், வெள்ளி அன்ன வாகனத்தில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. செய்யூர் செய்யூர் பஜார் பகுதியில், பழமை வாய்ந்த கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆண்டு சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கந்த சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சஷ்டி விரதம் இருப்பவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர். சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை 4:30 மணிக்கு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை இரவு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதேபோல, சித்தாமூர் அடுத்த பெருக்கரணையில் அமைந்துள்ள மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் மற்றும் காவனுார் முருகன் கோவில்களில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.