பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
திருத்தணி : ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், நேற்று நடந்த, ஆடி ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் தரிசித்தனர்.திருத்தணி பை-பாஸ் சாலையில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, பை-பாஸ் கூட்டுரோடு, செந்தமிழ் நகர், கந்தன், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் திரளான பெண்கள் கோவில் வளாகம் முன், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 8;00 மணிக்கு கும்பம் இடுதல் நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்கள் அடாவடி! பட்டியலிட்டு கட்டாய வசூல் செய்வதால் பக்தர்கள் அதிருப்திதிருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்களிடம், மொட்டை அடிக்க 30 ரூபாய், குளிக்க 10 ரூபாய் என, பட்டியலிட்டு, ஊழியர்கள், கட்டாய வசூல் செய்வதால், வரும் பக்தர்கள் மனவேதனையுடன் முருகப்பெருமானை தரிசிக்கின்றனர்.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடிக்கின்றனர்.5 இடங்களில்...பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு வசதியாக, மலையடிவாரத்தில், நாகவேடு சத்திரம், திருக்குளம், சன்னிதி தெரு, கார்த்திகேயன் குடில் மற்றும் மலைக்கோவில் ஆகிய ஐந்து இடங்களில் தேவஸ்தானம் சார்பில், முடி கொட்டகை அமைத்து, மொட்டை அடிக்கப்படுகிறது.ஒவ்வொரு முடி கொட்டகையிலும், குறைந்தபட்சம், எட்டு பேர் முதல் 20 பேர் வரை மொட்டை அடிக்கும் ஊழியர்கள் என, மொத்தம், 60 பேர் இருக்கின்றனர். மலைக்கோவிலில் மட்டும், 20 பேர் மொட்டை அடிக்கின்றனர். பக்தர்கள் முடி காணிக்கை, செலுத்த, கோவில் நிர்வாகம் சார்பில், 10 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.மொட்டைக்கு ரூ.30 : கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான முடி கொட்டகைகளில், மொட்டை அடிக்கும் பக்தர்களிடம் கட்டாய வசூலில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மொட்டை அடிக்க, தேவஸ்தானம் சார்பில், விற்கப்படும் டிக்கெட் வாங்கியும், ஒரு மொட்டைக்கு 30 ரூபாய் வீதம், ஊழியர்கள் கட்டாய வசூல் செய்கின்றனர். குறிப்பாக, மலைக்கோவிலில், தேவஸ்தான டிக்கெட் இருந்தாலும், பணம் கொடுத்தால் தான், மொட்டை அடிக்கின்றனர். குறைவாக கொடுக்கும் பக்தர்களை, தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். சில நேரத்தில் பக்தர்களுக்கும், மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.இலவச குளியலுக்கு பணம் : இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பக்தர்கள் சிலர் கூறுகையில், இலவச குளியல் அறைக்கு சென்று குளிக்க செல்லும்போது, அங்கு இருக்கும் துப்புரவு ஊழியர் 10 ரூபாய் கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். மேலும், குளியல் அறையில் தண்ணீர் வருவதில்லை. மாறாக அங்குள்ள பெரிய தொட்டியில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றனர். மேலும், வாளியும் சிறியது என்பதால், மொட்டை அடிக்கும் பக்தர்கள் சரியாக குளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கட்டாய வசூல் செய்வதால், மனநிம்மதியுடன் முருகப்பெருமானை தரிசித்து செல்ல முடிவதில்லை என்றனர்.இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்வது தவறு. நேரில் சென்று ஆய்வு செய்து தவறு செய்யும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பணம் கேட்கும் ஊழியர்கள் அல்லது தனிநபர்கள் குறித்து, மலைக்கோவிலில் உள்ள அலுவலகம் அல்லது என்னிடம் பக்தர்கள், புகார் தெரிவிக்கலாம் என்றார்.