பதிவு செய்த நாள்
20
அக்
2025
05:10
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் சாத்துப்படி செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார மூர்த்திகள், கோயில் அனைத்து மண்டபங்களிலும் உள்ள சுவாமி சிலைகளுக்கு அதிகாலையில் எண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, தீபாவளி சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாடைககள் அணிவிக்கப்பட்டு, வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி பூஜை நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், எஸ்.ஆர்.வி. நகர் கோல்கட்டா காளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாவளி சிறப்பு பூஜை நடந்தது.