பதிவு செய்த நாள்
20
அக்
2025
05:10
பெ.நா.பாளையம்; ஆனைகட்டியை சுற்றியுள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் தீபாவளி பண்டிகையையொட்டி கங்கை நீர் கலந்த தண்ணீரில் குளித்தனர்.
ஆனைகட்டி வட்டாரத்தை சுற்றி பட்டிசாலை, கூட்டுபுளிக்காடு, சின்னஜம்புகண்டி, வடக்காலூர், ஆலங்கண்டி புதூர், காலன் புதூர், சீங்குலி, தெக்காலூர், கொண்டனூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை வழங்கி, அவர்கள் தாங்கள் குளிக்கும் தண்ணீரில், அவற்றை கலந்து நேற்றைய தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் மேற்கொண்டனர்.
இது குறித்து, ஆனைகட்டி தயா சேவா சதன் அமைப்பின் ஆச்சார்யா சவுந்தரராஜன் கூறுகையில்," ஆனைகட்டி மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், அனைவரும், கங்கை நதிக்கு சென்று தீபாவளி நாளில் நீராட முடியாது. தீபாவளி நாளில் அவர்களை உண்மையாகவே கங்கா ஸ்நானம் செய்ய முடிவு செய்தேன். இதற்காக ரிஷிகேஷில் இருந்து, 50 லிட்டர் கங்கை நீர், ஆனைகட்டி கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அதை கொண்டனூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும், 500க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினருக்கு சிறு பாட்டில்களில் அடைத்து வழங்கினேன். நேற்றைய தீபாவளி நாளில் அனைவரும் தாங்கள் குளிக்கும் தண்ணீரில் கங்கை நதி நீரை கலந்து, உண்மையாகவே கங்கா ஸ்நானம் செய்தனர். பழங்குடியினருக்கு தயா சேவா சதன் சார்பில் பட்டாசு, இனிப்புகளும் வழங்கப்பட்டன" என்றார்.