பதிவு செய்த நாள்
08
ஆக
2014
11:08
மதுரை: மதுரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றனர். சுதந்திர தினத்திற்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, முக்கிய இடங்களில், இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஆனால், நேற்று முன்தினம் மாலை முதலே, போலீசார் பரபரப்பாகினர். கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவுபடி, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், கோவிலில் சோதனை நடத்தினர். ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வியாபாரிகளுக்கு தடை : நேற்று காலை, கோவில் சித்திரை வீதிகளில் போலீஸ் வாகனங்கள் தவிர, பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகளுக்கு, தடை விதிக்கப்பட்டது. கோவிலின் அனைத்து வாசல்களிலும், பக்தர்களின் வருகை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என, விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில், இன்ஸ்பெக்டர்கள் சித்திரை வீதிகளில் வலம் வந்து, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதலாக பாதுகாப்பு : நேற்று முன்தினம், ’மதுரையில் வெடிகுண்டு வெடிக்கும்’ என, தலைமை செயலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும், இதைத் தொடர்ந்தே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து, துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திராவிடம் கேட்டபோது, ”வெடிகுண்டு மிரட்டல் குறித்து, எந்த தகவலும் இல்லை. சுதந்திர தினத்திற்காக, இம்முறை, கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
தொடர்புடைய கோயில்கள் :