பதிவு செய்த நாள்
08
ஆக
2014
11:08
மகாவிஷ்ணுவின் மனைவி; மஞ்சள் பட்டுடுத்தி, மணிமுடி தரித்த நாயகி; தீபங்களின் தேவி; செல்வங்களின் அதிபதி; பாற்கடலில் அவதரித்தவள்...இப்படியாக பக்தர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வீற்றிருக்கும் மகாலட்சுமியை நோக்கி நோன்பு இருப்பதே, வரலட்சுமி நோன்பு எனப்படுகிறது. ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில், சுமங்கலி பெண்கள், நோன்பு மேற்கொள்வர். மாதவிலக்கான பெண்கள், அடுத்த வெள்ளிக்கிழமை நோன்பிருப்பர்.பூவும் பொட்டும் நிலைத்து இருக்கவும், சகல செல்வங்களுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் பாக்கியத்தை வேண்டி, திருமணமான பெண்கள், வரலட்சுமி நோன்பு மேற்கொள்வர்.வீட்டை துாய்மைப்படுத்தி, லட்சுமியை அலங்கரித்து, கலசம் வைத்து, நிவேதனம் படைத்து, லட்சுமி துதி பாடல்களை பாடி வழிபடுவர்.
பூஜையின் போது, ஆடைகள், மஞ்சள் சரடு, பூ, பழம் வைத்து பூஜை செய்து, மற்ற பெண்களுக்கும் கொடுப்பர். தன் வயதில் மூத்த சுமங்கலியிடம் வாழ்த்தும் பெறுவர்.கன்னிப் பெண்களும், இந்த விரதத்தில் பங்கேற்பர். சம்பிரதாய முறைப்படி, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கலச பூஜை, பிராண ப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகவும் செய்வோரும் உண்டு.புராணங்களில், வரலட்சுமி விரதத்துக்கு நிறைய கதைகள் இருக்கின்றன. பார்வதி தேவியிடம் சாபம் பெற்ற சித்ரநேமி, அப்சரஸ் பெண்களிடமிருந்து வரலட்சுமி விரதத்தை தெரிந்துகொண்டு, விரதமிருந்து சாபவிமோசனம் பெற்றாள்.
சவுராஷ்டிர ராணி சுசந்திரா, செல்வச் செருக்கால், மகாலட்சுமியை அவமதித்ததால், தன் செல்வங்களை இழந்தாள். அவள் மகள் சாருமதி, வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி, அவளுக்கு சகல செல்வங்களையும் அருளினாள். பின், தன் மகளைப் பார்த்து, சுசந்திராவும் வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை, மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.