லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள கள்ளப்பள்ளி பச்சநாச்சியம்மன் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு, பெரிய தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி, வெகு வி மர்சையாக நடந்தது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்துள்ள கள்ளப்பள்ளியில் பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம், 30ம்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 4ம் தேதி இரவு கொடுமுனி பல்வேறு வீதிவழியாக திருவீதி வரும் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதியன்று சிறிய தேரில் எல்லைக் காவல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று, 32 அடி உயரமுள்ள பெரிய தேரில் அம்மன் தேர் ஏறி இளைஞர்கள் தூக்கிக் கொண்டு கள்ளப்பள்ளி, கொடிக்கால் தெரு, அக்ரஹாரம், கடைவீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். அப்போது வீடுகள் தோறும் தேருக்கு முன் பொதுமக்கள் தேங்காய் பழம் வைத்து உடைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர். வரும், 10ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராடி சாமி குடிபுகும் நிகழ்ச்சியும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12ம் தேதி செவ்வாய்க்கிழமை உதிரவாய்த்துடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.