திருநெல்வேலி : சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவில் நேற்று கோமதியம்மன் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. தமிழகத்தில் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் திகழ்கிறது. சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய கோமதிஅம்பாள், சிவன், விஷ்ணு இருவரும் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என்று சங்கரலிங்கசுவாமியிடம் வேண்டினார். அம்பாளின் கோரிக்கையை ஏற்ற சுவாமி அம்பாளை ஒற்றைக்காலில் தபசு இருக்க வேண்டும் என்றார். தபசு கோலத்தில் இருந்த அம்பாளுக்கு சங்கரலிங்கசுவாமி, “அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு தனது உடலின் வலதுபகுதியை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இந்த அரிய காட்சிதான் ஆண்டுதோறும் “ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 30ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிசேகங்கள், தீபாராதனை, வீதிஉலா நடக்கிறது. 9ம் திருநாளில் நேற்று பகலில் அம்பாள் தேரோட்டம் நடந்தது. நாளை 9ம் தேதி 11ம் திருநாளில் மாலையில் தபசுக்காட்சி நடக்கிறது.
தேரோட்டம் தாமதம்: சங்கரன்கோவிலில் வழக்கமாக காலை 9மணிக்கு தேர் இழுக்கப்படும். அழைப்பிதழ்களிலும் 9 மணி என அச்சிடப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட பக்தர்கள் குழுமியிருந்தனர். ஆனால் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சறுக்கு கட்டைகள் முறையாக தயாரிக்கப்படாததால் அதனை தேர்ச்சக்கரங்களில் போட்டு தேரின் போக்கை கட்டுப்படுத்தும் ஒரு தரப்பினர் தேரை இழுக்க வரவில்லை. அதனை சரிசெய்யவும் கோயிலின் செயல் அலுலர் பொன் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சிக்கவில்லை. இதனால் இண்டு மணிநேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு பிறகே தேரோட்டம் நடந்தது. இதனால் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரினை இழுத்தனர்.