தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 10 அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. சுமார் 45 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2011 ல் 60 லட்சம் ரூபாய் செலவில் இலுப் பை, தேக்கு உள்ளிட்ட மரங்களை கொண்டு புதிதாக தேர் செய்யப்பட்டது. தேருக்கான இரும்பு அச்சு மற்றும் சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் செய்து கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது ஆண்டு தேரோட்டத்திற்காக, தேரின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுப்பணி துறை கட்டிட பிரிவை சேர்ந்த உதவி பொறியாளர் தங்கரத்தினம் ஆய்வு செய்தார். இதில் தேரோட்டத்திற்கு தேவையான உறுதி தன்மையுடன் தேர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.