மதுராந்தகம்: கெண்டிரச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், ஆடி மாத தேர் திருவிழா நேற்று நடந்தது. மதுராந்தகம் ஒன்றிய த்திற்குட்பட்ட கெண்டிரச்சேரி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதத்தை ஒட்டி கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் பகல் ஒரு மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10:00 மணிக்கு திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா சென்றார். தேர் அங்குள்ள முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.