குளித்தலை அருகிலுள்ள (10 கி.மீ) ரத்தினகிரி ஐயர்மலையில் ரத்தினகிரிநாதர் கோயில் உள்ளது. ஆயிரம் படிகள் ஏற வேண்டும். மேற்கு நோக்கி இறைவன் அமர்ந்துள்ளார். காகம் ஒன்று சிவலிங்க அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடத்தை கவிழ்த்து விட்டது. பின்னர் இறைவனின் ஆணையால் அது எரிந்து விழுந்தது. அதுமுதல் காகங்கள் இம்மலை உச்சியில் பறப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமறை இடி இடித்து பூஜை நடக்கிறது. வருணனே பூஜை செய்வதாக நம்பிக்கை. தினமும் காவிரிநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி குளித்தலை, ஈங்கோய்மலை ஆகிய இடங்கள் உள்ளன. காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி திருவீங்கோய் என்று பழமொழி இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இதன்படி காலையில் குளித்தலை கடம்பவன நாதரையும், மதிய நேரத்தில் ஐயர்மலை ரத்தினகிரி நாதரையும், மாலைப்பொழுதில் ஈங்கோய்மலை ஈங்கோய் நாதரையும் வழிபாடு செய்வது சிறப்பாகும். ஐயர்மலையில் வயிரப்பெருமாள் என்னும் அடியவர் தம் பிரார்த்தனையை நிறைவேற்றிய இறைவனுக்கு தன் தலையையே அரிந்து பலி கொடுத்தார். அவரே இங்கு காவல் தெய்வமாக விளங்குகிறார். இவர் உருச்சிலை சுவாமி என்று வழங்கப்படுகிறார்.