பதிவு செய்த நாள்
28
ஆக
2014
12:08
தூத்துக்குடி : மஞ்சநாயக்கன்பட்டி அய்யனார் கோவில் விழாவில், இரவு முழுவதும், 800 கலைஞர்கள் இடைவிடாமல் தேவராட்டம் ஆடி, சுவாமிக்கு காணிக்கை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில், அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கம்பளத்து நாயக்கர் இன மக்கள், தேவராட்டத்தின் மூலம், குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர். இந்தாண்டு, நேற்று நடந்த விழாவில், 20 பேர் கொண்ட ஒரு குழு வீதம், 40 கிராமங்களில் இருந்து, 40 குழுக்கள், அய்யனார் கோவில் விழாவில் பங்கேற்றனர். இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை, கால் பதம் வைக்கும் முறையான, 30 அடவிகளில், தேவராட்டம் நடைபெற்றது. சலங்கை, தலைப்பாகை கட்டி, கைகளில் வண்ணத் துணிகள் வைத்து, ’உருமி’ இசைக்கு ஆடினர். இதை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ரசித்தனர். கோவில் நிர்வாகி, தர்மராஜ் கூறுகையில், ”கம்பளத்து நாயக்கர் இனத்தில், பிறப்பு, இறப்பு, கோவில் நிகழ்ச்சி என, எதுவாக இருந்தாலும், தேவராட்டம் இடம்பெறும். பாரம்பரிய கலைகள் அழிந்து வரும் நிலையில், தேவராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம்,” என்றார். தமிழக பாராம்பரிய கலைகளில், தேவராட்டத்திற்கு முக்கிய இடம் உண்டு. கோவில்பட்டி அருகே உள்ள, 40 கிராமங்களை சேர்ந்த, 6 60 வயது ஆண், பெண்களுக்கு, தேவராட்டப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 72 அடவிகள் உள்ளன.