பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
சிவகங்கை: சிவகங்கை நகரில் விநாயகர் கோயில்களில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கவுரிவிநாயகர் கோயிலில், நேற்று காலை அனுக்கை விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. காலை 9 மணிக்கு, உற்சவர் முன் 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு, விநாயகர் சுவாமி புறப்பாடு நடைபெறும். கோகுலேஹால் தெருவில் உள்ள ரத்னகர்ப்ப கணபதி கோயிலில்,காலை 7 முதல் 9 மணிக்குள் கணபதிஹோமம், அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடைபெறும். டி.புதூர் சிவசக்தி விநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு, வெள்ளி அங்கியில் காட்சி அளித்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில், சதுர்த்தி திருவிழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. நேற்று மூலவருக்கும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார். இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. கலங்காது கண்ட விநாயகர் கோயில், கருதாவூரணி கைலாச விநாயகர் கோயில், மரகத விநாயகர் கோயில், ஜெயங்கொண்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.