பதிவு செய்த நாள்
10
செப்
2014
11:09
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 9.30 மணிக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. திருப்போரூரில், சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்ட, கந்தசுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில் இரண்டு கோடி ரூபாய் செலவில், 2012, ஜூலை மாதம் திருப்பணிகள் துவங்கின.விமானங்கள், ராஜகோபுரம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டன. பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்திற்கு, முதன்முதலாக, தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது.
தங்க மயில், வெள்ளி மயில், வெள்ளி அன்ன வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மர வாகனங்கள் சீரமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளன. ராஜகோபுர கதவிற்கு செப்புத்தகடு போர்த்தப்பட்டு, கதவில் புதிய மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 7ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.இன்று இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கின்றன.நாளை காலை, நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்த பின், கால 9.30மணிக்கு, மூலவர் விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. காலை 11:00மணிக்கு மகா அபிஷேகம், அன்னதானம், மாலை 6:00மணிக்கு, திருக்கல்யாணம், இரவு 8:00மணிக்கு வீதியுலா ஆகியவை நடக்க உள்ளன.யாகசாலை பூஜைகளில், வேத, திருமுறை பாராயணம் நடக்கிறது.
தொடர்புடைய கோயில்கள் :