பதிவு செய்த நாள்
10
செப்
2014
12:09
திருவொற்றியூர் : திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் திருப்பணி முடிந்தும், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளதால், பக்தர்கள் கவலையடைந்து உள்ளனர். வடசென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், தேவார மூவரால் பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது.பழமை வாய்ந்த அந்த கோவிலில் 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், 2012ம் ஆண்டு, கும்பாபிஷேக திருப்பணிக்கு, 13வது நிதிக்குழு மூலம், 45.60 லட்சம் ரூபாயும், அரசு மானியம், 21.50 லட்சம் ரூபாயும், ஆணையர் பொதுநல நிதி, ஒன்பது லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன.கோவில் திருப்பணியுடன், கோவில் குளத்தை சீரமைக்க, அறநிலைய துறை திட்டமிட்டது. தற்போது, கனமழை, வெள்ளம் வந்தாலும் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க, களிமண் கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓரிடத்திலிருந்து களிமண்ணை எடுத்து வர, மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாடு வாரிய தடையில்லா சான்று தேவை. அதற்கு, விண்ணப்பித்து ஓராண்டாகியும், சான்று கிடைக்காததால், களிமண் கொட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர் கோவில் குளத்தை சுற்றியும் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. சேதமடைந்த படிக்கட்டுகளை புதிதாக கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. மழைக்காலத்திற்குள் பணி முடிந்து, குளம் தயாராகிவிடும் என, கோவில் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”திருப்பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டன. புதிய தேர், 46 லட்சம் ரூபாய் செலவில், 42 அடி உயரத்திற்கு அமைக்கும் பணி முடிந்து, வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை எந்த மாதத்தில் நடத்துவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.