பதிவு செய்த நாள்
11
செப்
2014
01:09
திருவண்ணாமலை: மழை வேண்டி ஒரே கிராமத்தை சேர்ந்த, 400 பேர், திருப்பதிக்கு சென்ற மொட்டை போட்டு வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில், சாணாங்குப்பம் கிராமம் உள்ளது. இப்பகுதியில், போதிய மழை இல்லாததால், சாணாங்குப்பம் காளியம்மன் கோவில் பூசாரி பாப்பின் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த, 400 பேர், கடந்த, 6ம் தேதி திருப்பதிக்குச் சென்று, மழை வேண்டி, முடி காணிக்கை செய்து, மொட்டை அடித்து வழிபாடு நடத்தினர். இதுகுறித்து, அக்கிராம மக்கள் கூறியதாவது: சாணாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், போதிய மழை இல்லை. இதனால், கடந்த மாதம் எங்கள் குல தெய்வமான காளியம்மனுக்கு பொங்கல் வைத்து, 350 ஆடுகள் பலியிட்டோம். அதனை தொடர்ந்தும், மழை இல்லை. இதனால், எங்கள் ஊரை சேர்ந்த, 400 பேர், திருப்பதிக்குச் சென்று மழை வேண்டி முடிகாணிக்கை செய்து மொட்டை அடித்தோம். ஐந்து நாட்கள் கழித்துதான், ஊருக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியதால், திருவண்ணாமலைக்கு சென்று, அண்ணாமலையாரை தரிசனம் செய்தோம். இவ்வாறு கூறினர்.