பதிவு செய்த நாள்
19
செப்
2014
12:09
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி விழா, நாளை (செப். 20) துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி வரிசையில் காத்திருந்து, பெருமாளை தரிசித்து செல்வர். இதற்காக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்தாண்டு புரட்டாசி சனி விழா 20ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு நடைதிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதையொட்டி கோயில் நுழைவு வாயில்களில் இரு புறமும் இருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பக்தர்கள் கடந்தாண்டு ஒரே பாதையில் சென்று வந்தனர். இதனால் நுழைவு வாயில் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது இதை பயன்படுத்தி பெண்களிடம் நகை திருட்டு சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து இந்தாண்டு நுழைவு வாயில் வழியாக கோயில் செல்லும் பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும் போது, கோபாலசாமி கோயில் வழியாக இறங்கி கோவனேரி கண்மாய் கரை வழியாக வந்து, கோயிலின் மேற்கு பக்க கால்வாய் வழியாக மெயின் ரோட்டை அடையுமாறு பாதை ஏற்படுத்தி, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோயில் செயல் அலுவலர் ராமராஜா,"" திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தரிசனம் முடித்து வருபவர்கள் மாற்று பாதையில் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.