திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காசியை விட வீசம் அதிகம் என போற்றப்பட்ட திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம். கரை புரண்டோடிய வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாவிட்டாலும், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. மற்ற நாட்களை காட்டிலும் அமாவாசை நாட்களில் ஏராளமானோர் திருப்புவனம் வரு கின்றனர். அமாவாசை தினங்களில் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை மிகவும் புண்ணியமானது என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி அமாவாசையன்று முன்னோர் தங்களது சந்ததியினரை வாழ்த்துவது ஐதீகம் என்பதால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் காலை ஆறு மணி முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இட நெருக்கடியால் வைகை ஆற்றில் வைத்து பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காய்கறி, அரிசி, நவதான்யம் உள்ளிட்டவற்றை முன்னோர்களுக்கு படைத்து சூரியனை வழிபட்டனர்.