பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
பழநி : பழநி மலைக்கோயில் "ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாதுகாப்பு வல்லுனர் குழு முன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை "ரோப்கார் இயக்கப்படுகிறது.இது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 28ல் நிறுத்தப்பட்டு மேல்தளம், கீழ்தளத்திலுள்ள உருளை, பல்சக்கரங்கள் கழற்றப்பட்டு தேய்மானமடைந்த பகுதிகள் மாற்றப்பட்டன. தற்போது 8 பெட்டிகளும் முழுமையாக புதுப்பிக்கப் பட்டுள்ளது. "ரோப்கார் பாதுகாப்பு வல்லுனர் குழு, தனியார் நிறுவனத்திடம் புதிய ஷாப்ட்களை மாற்றவேண்டும். சிறிதளவு தேய்மான பல்சக்கரம், உருளைகளை முற்றிலும் புதிதாக பொருத்த வேண்டுமென பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, புதிய இரண்டு ஷாப்ட்கள், பெரிய பல்சக்கரங்கள், உருளைகள் ரோப்காரில் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகளாக கம்பிவட கயிற்றில் மாற்றப்பட்டு சில நாட்களாக "அலைமன்ட் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் வல்லுனர் குழு முன்னிலையில், ஒவ்வொரு பெட்டிகளிலும், 300 கிலோ அளவு எடைகற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின், இம்மாத இறுதிக்குள் "ரோப்கார் இயங்க உள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்," வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ரோப்காரில் பராமரிப்பு பணிகள் 15 முதல் 20 நாட்கள் வரை மேற்கொள்வோம். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கமிட்டியினர், ரோப்காரை முற்றிலும் புதுப்பிக்க கூறியதால் காலதாமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு கமிட்டியினர் சான்றிதழ் வழங்கிய உடன் பக்தர்கள் பயன்பாட்டிற்காக "ரோப்கார் இயக்கப்படும், என்றார்.