பதிவு செய்த நாள்
25
செப்
2014
12:09
பழநி : பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நடந்தது. கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. உச்சிகாலபூஜை வேளையில் திருஆவினன்குடி கோயிலும், மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. போகர் ஜீவசமாதியில் காலை 10.30 மணிக்கு மேல் காப்புகட்டுதல் நடந்தது. புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளினார். பெரியநாயகியம்மன் கோயிலில், செப்.,24 முதல் அக்.,3 வரை தினமும் மாலை 6 மணிக்கு மேல் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. சூரன் வதம்: அக்.,3 ல் அம்பு, வில் போட்டு, வன்னிகா சூரவதம் செய்தல் நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு மலைக்கோயிலில் சாயரட்சை பூஜை செய்யப்பட்டு, பகல் 2.30 மணிக்கு மேல் மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும்.
மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்புபோடுதல், வன்னிகாசூரன் வதம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.