பதிவு செய்த நாள்
26
செப்
2014
12:09
அவிநாசி : அவிநாசியில் உருவாக்கப்பட்ட மலர் மாலைகள் மற்றும் மலர் கிரீடங்கள், திருப்பதிக்கு நேற்று அனுப்பப்பட்டன. திருப்பதியில் பிரம்மோற்சவம் நாளை (செப்., 27) துவங்குகிறது. அதையொட்டி, காலை 11.00 முதல் மாலை 3.00 மணி வரை தினமும் திருமஞ்சனம் நடைபெறும். அதற்காக, தாயார் மற்றும் பெருமாளுக்கு அணிவிக்க மலர் மாலைகள், கிரீடங்கள், அவிநாசியில் இருந்து மலர் மாலைகள், கிரீடங்கள் அனுப்பப்பட்டன.அவிநாசியிலுள்ள மலர் நிலையம் ஒன்றில், மகிழம்பூ, ஆர்கெட், தாழம்பூ, விருட்சப்பூ, கருந்துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, பல்வேறு வண்ண ரோஜா இதழ்கள் உள்ளிட்ட மலர்கள் மற்றும் வெட்டிவேர், தாமரை வேர், பன்னீர் இலைகள், ஏலக்காய், ஆங்கூர் திராட்சை, விலாநொச்சி வேர், பாதாம் பருப்பு என மொத்தம் 108 வகைகளில் மாலைகள், கிரீடங்கள் கடந்த ஒரு வாரமாக தயாரிக்கப்பட்டன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை பஸ் மூலம் திருப்பதிக்கு அனுப்பப்பட்டன. மலர் வியாபாரி பாபு கூறுகையில், ஆண்டுதோறும் திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்கு, மலர் மாலைகள், கிரீடங்கள் தயாரித்து அனுப்பி வருகிறோம். இந்தாண்டு விசேஷமாக 108 வகையிலான மலர்கள், வேர், பழ வகைகளில் தயாரித்துள்ளோம். சில மாலைகளை, திருப்பதிக்கே சென்று தயாரிக்கிறோம். அதற்காக, 40 பேர் அங்கு செல்கிறோம், என்றார்.