உடுப்பி கிருஷ்ணரின் மீது பாடல்கள் பாடியவர்களுள் கனகதாசர் என்பவர் குறிப்பிடத்தக்கவர். தாழ்ந்த குலத்தில் பிறந்து கனகதாசர் உடுப்பி கிருஷ்ணரைக் காண கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் வாதிராஜர், அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. கோயிலின் மேற்குப்பக்கம் உள்ள ஒரு குடிசையில் அவரை தங்கச்சொல்லி விட்டார். தன் தம்புராவை மீட்டி கிருஷ்ணர் மீது கனகதாசர் பல பாடல்கள் பாடினார். உன்னைக் காணும் பேறு எனக்கு கிடையாதா ? என்று மனமுருகி பாடும் போது பெரும் மழை வந்தது. மின்னலும், இடியும் கடுமையாக இருந்தது. அப்போது, கோயிலின் மேற்குப்பக்க சுவரில் இடிவிழுந்து சாய்ந்தது. இடிந்து விழுந்த இடைவெளியில் கிருஷ்ணர் கனகதாசருக்காக காட்சி கொடுத்தார். இப்படி கனகதாசருக்காக காட்சி தந்த வாசல் கனகதாசர் வாசல் என்ற பெயரில் விளங்குகிறது. பக்தர்கள் கனகதாசர் வாசல் வழியாக கண்ணனைத் தரிசனம் செய்ய செல்கின்றனர். மரத்தால் செய்யப்பட்ட மத்து ஒன்றை, கண்ணனுக்கு காணிக்கையாக பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த மத்துக்கள் கோயில் வாசலிலேயே கிடைக்கிறது. ஒன்பது துவாரங்களைக் கொண்ட சாளரம் வழியாகவே கிருஷ்ணரை தரிசிக்க முடியும். இவர்களுக்கு நவக்கிரகங்கள் நன்மை அருளும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இச்சாளரம் நவக்கிரக கிண்டி என்று அழைக்கப்படுகிறது.