சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12 வருடகாலம் இருந்து விட்டு வெளியேறும்போது, உலகில் ரோகிணி சகடபேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது என சிவன் வாயிலாக தெரிந்துகொண்டார் நாரதர். அவர் மூலமாக இவ்விஷயத்தை தெரிந்து கொண்ட வசிஷ்டர், பஞ்சம் வருவதை தசரத சக்கரவர்த்தியிடம் கூறினார். அதிர்ந்த தசரதர், தம் மக்களை காப்பதற்காக சனிபகவான் ரோகிணியை விட்டு விலகும் முன்பு அவரை தடுத்து நிறுத்தி போர் புரிய சென்றார். அவரை வெல்வது எளிதான காரியம் அல்ல என்பதால் அவர்பாதம் பணிந்து வேண்டினார். நாட்டு மக்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்த தன்னையே எதிர்த்த தசரதரின் கடமை உணர்வை பாராட்டிய சனிபகவான் தான் அயோத்தி மக்களை ரோகிணி சகடபோ காலத்தில் தொந்தரவு செய்யமாட்டேன் என்று உறுதியளித்தார். மேலும் தன் மனைவியர் மற்றும் பிள்ளைகள் மாந்தி, குளிகன் ஆகியோருடன் காட்சி தந்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாரையூர் ராமநாதசுவாமி கோயிலில் தசரதர் வழிபடும் நிலையிலும், குடும்பத்துடனும் கூடிய சனிபகவானைத் தரிசக்கலாம். இவரது சன்னதி முன்பு தனியே கொடிமரமும் இருக்கிறது.