நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவாக, அம்மன் பவனி சென்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த செப்., 24 ல் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. நேற்று பகல் 12:00 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதைக்கு பின், புறப்பட்ட ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் அணிவகுத்தன. மாலை 6:00 மணிக்கு ஊர்வலம் பஞ்சலிங்கபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு ‘பாணாசுரன்’ என்ற அரக்கனை தேவி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் கோயிலுக்கு திரும்பி வந்ததும், முக்கடல் சங்கமத்தில் தேவிக்கு ஆராட்டு நடைபெற்று, விழா நிறைவு பெற்றது.