பதிவு செய்த நாள்
04
அக்
2014
01:10
ராமேஸ்வரம்: விஜயதசமியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. * ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்., 24ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. இதையொட்டி, பர்வதவர்த்தினி அம்மன் தொடர்ந்து 8 நாட்கள் அன்னபூரணி, மகாலெட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று, விஜயதசமியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, பிரியாவிடையுடன் புறப்பாடாகி குதிரை வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். பின், மகர்நோம்பு திடலில் பர்வதவர்த்தினி அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயில் குருக்கள் உதயகுமார் மகா தீபாரதனை காண்பித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
* கீழக்கரை: விஜயதசமியான நேற்று உற்சவ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீப்பந்தம், மேளதாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். சக்கர தீர்த்தக்குளம் அருகே உள்ள ஈசான்ய மூலையில் அலங்கரிக்கப்பட்ட பந்தல் முன்புறம் வாகனத்தில் இருந்து பெருமாள் அம்பு எய்தும் நிகழ்ச்சி காலை 10 மணியளவில் நடந்தது. இதில் கோயில் பட்டர்கள் ஜெயராம பட்டர், சவுமிய நாராயணன், உப்புலி, நவநீதன், கிருஷ்ணமூர்த்தி பட்டர் மற்றும் சமஸ்தான தேவஸ்தான பேஷ்கார் கண்ணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.* பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள், ஈஸ்வரன் கோயில் விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் கோயில் முன்பு வன்னிகாசூரனை வதம் செய்தனர். தரைப்பாலம் அருகில் உள்ள முருகன் கோயில் முன்பாக குதிரை வாகனத்தில் எழுந்திருளிய முருகன் சூரனை வதம் செய்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள், பத்திரகாளியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து சூரனை வதம் செய்தார். நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ராமநாதபுரம் மகர்நோன்பு பொட்டலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.