பதிவு செய்த நாள்
06
அக்
2014
12:10
ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்., 8 ல், நடை சாத்தப்படும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:அக்., 8 ல், நடைபெறவுள்ள சந்திர கிரகணத்தை யொட்டி, அன்று அதிகாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், வழக்கம் போல் நடை திறந்து ஸ்டிபலிங்க பூஜை மற்றும் 5 கால பூஜைகள் நடைபெறும். பின்பு, காலை 11:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்ததும் மாலை 6:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, இதர பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும், என்றார்.மாசாணியம்மன்: தமிழகத்திலேயே அம்மன் சயன நிலையில் (படுத்த நிலையில் ) காட்சி தருவது கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மட்டும் தான். நீதி தேவதையாக, சக்தியின் அவதாரமாக அருள்பாலிக்கும் மாசாணியம்மனை வழிபட, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.கோவில் உதவி ஆணையாளர் அனிதா கூறுகையில், ”வரும் 8ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இக்கோவிலில் பிற்பகல் 2:45 முதல் மாலை 6:04 மணி வரை நடை சாத்தப்படும். கோவில் சுத்தம் செய்யப்பட்ட பின், இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்,” என்றார்.