பதிவு செய்த நாள்
13
அக்
2014
12:10
வாழப்பாடி: புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில், மழை வேண்டி யாகம் வளர்த்து வர்ண பகவானுக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். வாழப்பாடி பகுதியில், இரண்டு ஆண்டாக பருவ மழை பொய்த்து வறட்சி நிலவி வருகிறது. முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, வசிஷ்டநதி மற்றும் நீரோடைகள், குளம், குட்டை, ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்து போனதால் விவசாய கிணறுகளும், ஃபோர்வெல்களும் வறண்டு போயின. அதனால் பயர் செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். அணைப்பாசன வசதி பெறும் கிராமங்களிலும், ஆற்றுப்படுகை கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நீண்டகால பலன் தரும் பாக்கு, தென்னை மரங்களும் காய்ந்து கருகி வருவதால், ஆயக்கட்டு விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால், மழை வேண்டியும், நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கும் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை நிரம்ப வேண்டியும், வேத விற்பன்னர்களை கொண்டு யாகம் வளர்த்தும், விவசாயிகள் நேற்று சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். சிறப்பு பூஜை வழிபாட்டில், அணைப்பாசன விவசாயிகள் மட்டுமின்றி, ஆறு மற்றும் வாய்க்கால் பாசன விவசாயிகளும், பல்வேறு கிராம மக்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.