பதிவு செய்த நாள்
23
அக்
2014
02:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளி பண்டிகை, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில், குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், காரவகைகள் போன்றவை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சை நகரின் அனைத்து பகுதிகளிலும் நேற்று (22ம் தேதி) அதிகாலை முதலே, புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு இனிப்புகள் வழங்கி உபசரித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில், சங்கர நாராயணர் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், திட்டை குருபகவான் கோவில், ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வழிபாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழை நேற்று ஓய்ந்ததால், எந்தவித சிரமமும் இன்றி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைமேற்கொண்டிருந்தனர்.
மகா குபேர ஹோமம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குபேர ஸ்தலமான ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவிலில், இன்று, (23ம் தேதி) மஹா குபேர ஹோமம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஐப்பசி அமாவாசை நாளில், குபேர ஸ்தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவிலில், மஹா குபேர ஹோமம் நடக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், (இன்று) அமாவாசை வருவதால், மஹா குபேர ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்துள்ளது.