மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கை கொடுக்கும் வைகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2014 01:10
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து நிரப்பப்பட்டு வருகிறது.இத்தெப்பக்குளத்தை மன்னர் திருமலை நாயக்கர் 1645ல் கட்டினார். இதற்காக பள்ளம் தோண்டும் போது முக்குறுணி விநாயகர் சிலை கிடைத்தது. அதை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமலை நாயக்கர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.305 மீட்டர் நீளம், 290 மீட்டர் அகலம், 30 அடி ஆழம் கொண்ட தெப்பக்குளத்தில் நிரந்தரமாக முன்பு தண்ணீர் தேக்கப்பட்டது. இதற்காக வைகை ஆற்றில் இருந்து தெப்பம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. தற்போது அவை பராமரிப்பு இன்றி தூர்ந்து விட்டது.இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் போது ஜெனரேட்டரை இயக்கி நீர் எடுத்து தெப்பக்குளம் நிரப்பப்படுவது வழக்கம். மதுரையில் பல ஆண்டுகளாக மழை பெய்யாமல் வறட்சி நிலவியதால் வைகை ஆறு வறண்டது. தண்ணீர் இல்லாத தெப்பத்தில் தைப்பூசம் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நிலை தெப்பம் நடந்தது.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் முயற்சியால் வைகையில் இருந்து தண்ணீர் எடுத்து தெப்பக்குளம் நிரப்பப்பட்டு வருகிறது.நாள் ஒன்றுக்கு ஒரு அடி தண்ணீர் நிரப்பப்படுகிறது. 15 அடிக்கு 15 நாட்கள் வரை தண்ணீர் நிரப்ப உள்ளனர்.