பதிவு செய்த நாள்
04
நவ
2014
12:11
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கப்பட்டன. சைதாப்பேட்டையில் சொர்ணாம்பிகை உடனுறை காரணீசுவரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு, 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ௧௨ ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் கோவில் திருப்பணிகள் துவக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில், மேயர் சைதை துரைசாமி, அறநிலைய துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ராஜகோபுரம், ஐந்து சன்னிதிகளின் விமானம் ஆகியவற்றுக்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்சவர்ணம் பூசப்படுகிறது. புதிதாக வசந்த மண்டபம் கட்டப்படுகிறது. நவக்கிரகங்கள், அக்னி மூலையில் இருந்து, ஈசான மூலைக்கு மாற்றப்பட உள்ளன. வேதகிரீசுவரர் சன்னிதி புனரமைக்கப்படுகிறது. மேற்கு வாசலில், மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட உள்ளது. வாகன மண்டபம், நந்தவனத்திற்கு மாற்றப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடக்க உள்ளன.