சிவனின் வாகனமான நந்தியின் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையை பொள்ளாச்சி அருகிலுள்ள பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். சிவபக்தரான படிக்காசு புலவர் தினமும் இங்குள்ள சிவனை வணங்கி பாடல் பாடுவார். அவரது பாட்டில் மகிழும் சிவன், ஒரு படிநிறைய காசு கொடுப்பார். ஒரு சமயம் படிக்காசு புலவர் மெய்மறந்து கண்களை மூடி பாடினார். அவர் பாடிமுடித்து விழித்தபோது சிவன், அம்பிகை இருவரையும் காணவில்லை. தன்னிடம் சிவன் விளையாடுகிறார் என்றுணர்ந்த புலவர் இங்குள்ள நந்தியிடம், சிவன் எங்கே? என்று கேட்டார். நந்தி, சுவாமி இருக்கும் திசையை நோக்கி தனது தலையை திருப்பிக் காட்டிக் கொடுத்தார். அதன்பின்பு புலவர், சிவன் மறைந்திருந்த இடத்திற்கு சென்று அவரிடம் படிக்காசு பெற்றார். தங்களை காட்டிக்கொடுத்த நந்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அம்பாள் அதன்மீது அமர்ந்து கொண்டாள். இதன் அடிப்படையில் இங்கு தனிச்சன்னதியிலுள்ள பெரியநாயகி அம்பாள், ரிஷபத்தின் மீது அமர்ந்தகோலத்தில் காட்சி தருகிறாள். சுவாமி எதிரேயுள்ள நந்தி, சிவன் மறைந்திருந்த இடத்தை நோக்கி திரும்பியபடி இருக்கிறது.