பதிவு செய்த நாள்
05
நவ
2014
02:11
தர்மபுரி : முத்தம்பட்டியில், பிரசித்த பெற்ற ஆஞ்சநேயர் கோவிலை அகற்ற கோரி வனத்துறையினர், நோட்டீஸ் கொடுத்த சம்பவம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரியை அடுத்த, முத்தம்பட்டி வனப்பகுதியில், பழமை வாய்ந்த, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் ஸ்வாமி அமைந்துள்ள மலையின் மீது, ரயில் பாதை அமைக்க முற்பட்ட போது, தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் ஸ்வாமி உள்ள மலை அருகே ரயில்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக, பக்தர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.ஆரம்ப காலத்தில், குறைந்தளவே பக்தர்கள் வந்த நிலையில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, சனிக்கிழமை தோறும் பக்தர்கள், ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை மற்றும் அமாவாசை, புரட்டாசி மாதங்களில் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு சாலை வழியாக பொதுமக்கள், பக்தர்கள் வந்து செல்வதற்காக மாநில நெடுஞ்சாலை துறை சார்பிலும், தர்மபுரி யூனியன் சார்பிலும் சாலை அமைக்கப்பட்டது.வனத்துறையின் அனுமதி பெற்று சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள், இரு சக்கர மற்றும், நான்கு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு எளிதாக வந்து செல்கின்றனர். இதைத்தவிர தர்மபுரி, சேலம் வழியாக செல்லும் பயணிகளின் ரயிலில் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், பக்தர்களின் வசதிக்காக கோவிலின் முன் அறநிலைத்துறை ஷெட் மற்றும் கோவில் அலுவலகம் அமைத்துள்ளது. வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் கோவில் அமைந்துள்ள நிலையில் தற்போது, இக்கோவிலை அகற்றக் கோரி வனத்துறையினர், ஹந்து சமய அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.அதில்,"வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள இக்கோவிலை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், ஒரு மாதத்திற்குள் அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வனத்துறை மாவட்ட அலுவலர் கூறியுள்ளார்.இசசம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர், ஒருவர் கூறியதாவது:முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை அகற்ற, வனத்துறையினர், நோட்டீஸ் அனுப்பி உள்ளது உண்மை தான். இக்கோவிலின் பழமை மற்றும், சிறப்பு குறித்தும், வனத்துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு, ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்படும். மேலும், வீர ஆஞ்சநேயர் கோவில் அதே இடத்தில் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.