ஏழு ஊர் அம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2014 11:11
மதுரை: மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள 7 கிராமங்களில் உள்ள அம்மன்களுக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் 7 அம்மன்களையும் கிராம மக்கள் கடந்த 3 நாட்களாக வழிபட்டு வந்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று டி.கல்லுப்பட்டியை சுற்றியுள்ள 6 கிராம மக்கள், மூங்கில்கள் மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட் தேர்களை வடிவமைத்தனர்.
பின்னர் அனைத்து தேர்களும் வி.அம்மாபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அதைப்போல வி.அம்மாப்பட்டி கிராம மக்கள் 7 ஊர்களுக்கான அம்மன்களை வடிவமைத்து தயார் நிலையில் செய்து வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராம மக்களும் அவர்களுக்கு உரிய அம்மன்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்தந்த தேர்களில் அம்மன் வைக்கப்பட்டு தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தேர்களை இழுத்து வழிபட்டனர். இந்த விழா மத நல்லிணக்க விழாவாகவும் கொண்டாடப் படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். விழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.