பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
கூடலூர்: சபரிமலை சீசனுக்காக நவ.,17 முதல் குமுளி மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் ஐயப்ப பக்தர்கள் உள்ளனர். சபரிமலை சீசன் வரும் 17ம் தேதி (கார்த்திகை 1) துவங்குகிறது. மண்டலபூஜை விசேஷ காலங்களுக்காக பக்தர்கள் வாகனங்களில் தேனி, குமுளி வழியாக செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்பாதையில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரிக்கும் போது, பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுவது வழக்கம். இதனால் பக்தர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, வழக்கமாக கேரளா செல்லும் வாகனங்களும், குமுளி வரை செல்லும் தமிழக அரசு பஸ்களும் போக்குவரத்தில் சிக்கி பல மணி நேரம் திணறும். இதனைத் தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி விழா நேரங்களில் மட்டும் குமுளி மலைப்பாதையை ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்தினர்.
இந்த ஆண்டு சீசன் துவங்கும் போதே இப்பாதை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். ஒருவழிப்பாதை: தேனி, திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள், கம்பம் வரை வந்து கம்பம் மெட்டு வழியாக செல்ல வேண்டும். சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள், குமுளி மலைப்பாதை வழியாக வர வேண்டும். இதற்காக கம்பத்தில் தற்காலிக செக் போஸ்ட் அமைக்கப்பட உள்ளது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,"ஒவ்வொரு ஆண்டும் டிச.,15 முதல் ஜன., 15 வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்காலகட்டத்தில் குமுளி மலைப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு கேரளா இடுக்கி மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே குமுளி மலைப்பாதையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதனால் இந்த ஆண்டு நவ.,17 முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றலாமா என ஆலோசித்து வருகிறோம். நவ.,12 ம் தேதி, உத்தமபாளையத்தில் நடைபெற உள்ளஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து இறுதி செய்து அறிவிக்கப்படும்,” என்றனர்.