கருமத்தம்பட்டி : பெரிய மோப்பிரிபாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையம் செல்வ விநாயகர் கோவில் திருப்பணி முடிந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கும்பஸ்தானம் செய்விக்கப்பட்டு, முதல் கால ஹோமம் முடிந்து, பூர்ணகுதி நடந்தது. இரவு மூலவர் பிரதிஷ்டை முடிந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தானம், தச தரிசனம், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.